அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்


அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 29 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், அரியலூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். முகாமை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டு தவணையாக நடைபெற உள்ளது. இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட 71,136 குழந்தைகள் பயன்பெறுவார்கள். அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க 549 மையங்கள் செயல்படவுள்ளன. நடமாடும் குழு, பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட 442 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தியும், அதன் மூலமும் அனைத்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக 11.03.2018 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று கூறினார்.

முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, வருவாய் கோட்டாட்சியர் மோகனராஜன், அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத், வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, நகர்ப்புற மருத்துவமனை நிரஞ்சனா, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தா.பழூர் ஒன்றியத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதரநிலையத்தில் நடைபெற்ற முகாமில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி அறிவுரையின்படி டாக்டர்கள் சரவணன், உதயராஜ் ஆகியோர் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தனர்.

இதேபோல் பொதுமக்கள் வசதிக்காக முகாமானது தா.பழூர், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான், விக்கிரமங்கலம், சுத்தமல்லி ஆகிய அரசு மருத்துவமனைகள், பஸ் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், பள்ளிக்கூடங்கள் என பல்வேறு இடங்களில் உள்ளிட்ட 80 மையங்கள் அமைக்கப்பட்டது. தா.பழூர் ஒன்றியத்தில் ஒட்டு மொத்தமாக 9 ஆயிரத்து 715 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமில் அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 414 பேர் பணியில் ஈடுபட்டு முகாமிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து இருந்தனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லட்சுமி தரன் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெற்றோர்கள் 5 வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து கொடுத்து அழைத்து சென்றனர். 

Next Story