போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கலந்து கொண்டனர்


போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:00 AM IST (Updated: 29 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக கிராமப்பகுதியில் 1079 முகாம்களும், நகராட்சி பகுதியில் 119 முகாம்களும் என மொத்தம் 1198 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதையொட்டி பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் தங்கமணி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ளபிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தினை போட்டுக்கொண்டு போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தாய்மார்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர்.கோ.ரமேஷ்குமார், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.செந்தில், காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.டி.எஸ்.ஜெயகவுதமன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஆர்.செந்தில்குமார், பள்ளிபாளையம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜி.மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்நடந்தது. இந்த முகாமிற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில் முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் வெங்கடாசலம், வீட்டு வசதி சங்கத் தலைவர் கோபால், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம், ரோட்டரி சங்க தலைவர் குணசேகர், செயலாளர் வினோத், பொருளாளர் இளங்கோ, முன்னாள் ரோட்டரி தலைவர் என்.பி.ராமசாமி, ராசிபுரம் எஜூகேஷனல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தருண்குமார், பொருளாளர் பாரதி, நகராட்சி துப்பரவு அலுவலர் பாலகுமாரராஜூ, இன்னர்வீல் சங்க நிர்வாகிகள், துப்பரவு ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராசிபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயலட்சுமி நன்றி கூறினார். ராசிபுரம் நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் 21 இடங்களில் நடந்தது.

நாமக்கல் நகராட்சி பகுதியில் பஸ்நிலையம், தாய் சேய் நல விடுதி, அரசு ஆஸ்பத்திரி, குழந்தைகள் நல மையங்கள் என 45 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் நேற்று காலை முதல் மாலை வரை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்றும் (திங்கட் கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கே சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story