நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:36 AM IST (Updated: 29 Jan 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் இருந்து முத்தூர் வழியாக கரூர் மாவட்டம் கார்வழி வரை கே.7 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

முத்தூர்,

காங்கேயத்தில் இருந்து முத்தூர் வழியாக கரூர் மாவட்டம் கார்வழி வரை கே.7 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் முத்தூர் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7 மணி, மதியம் 3 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் கார்வழி வரை இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் கார்வழி, குமாரவலசு, அத்தப்பகவுண்டன்வலசு, கொக்காணிபாளையம், பூண்டிபாளையம், செல்லப்பம்பாளையம், ஊடையம், துத்திக்குளம், நகப்பாளையம், ஜீவாநகர், பொன்னாபுரம், சென்னாக்கல்மேடு, மலையத்தாபாளையம், குண்டுபுளியங்காடு, ஈ.பி. நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதியம் 2 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மதியம் இந்த பஸ்சில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னாக்கல்மேடு பஸ்நிறுத்தத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story