அமராவதி ஆற்றில் இருந்து மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை


அமராவதி ஆற்றில் இருந்து மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2018 3:30 AM IST (Updated: 29 Jan 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றில் இருந்து மணல் கடத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரம்,

மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாவும் தமிழகத்தில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். மணல் கடத்தலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால், அமராவதி ஆற்றில் மணல் எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் இந்த தடையை மீறி அமராவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. கிணற்று பாசனம் அழிந்து கொண்டிருக்கிறது. பொது மக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அமராவதி ஆற்றில் இருந்து மணலை திருடி வாகனம் மூலம் எடுத்துச் செல்வது வருவாய்துறையினருக்கு தெரிந்தால் அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்திவிட்டு மணலுடன் வாகனத்தை மீட்டுச் செல்கிறார்கள். அதன் பிறகு அந்த மணலை அபராத தொகையைவிட கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்து விடுகிறார்கள்.

மணல் கடத்துவதால் லாரி உரிமையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமராவதி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர் யார் என்பதை அதிகாரிகள் கண்டறிவதில்லை. ஒருவேளை கண்டறிந்தாலும் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்படியொரு நிலை இருப்பதால்தான் மணல் கடத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மணல் கடத்தலில் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதால் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.

அமராவதி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகாரிகள் துணை நிற்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் உண்மை இருப்பதால் தான் மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் பணியிடமாற்றம் செய்கிறது. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய பொறுப்பு வருவாய்துறைக்கு தான் அதிகம் உள்ளது.

இருப்பினும் ஆற்றையும் அதன் கரைகளையும் பொதுப்பணித்துறை முழுமையாக பராமரித்தால், சமூக விரோதிகள் மணல் லாரிகளை ஆற்றில் எளிதாக இறங்கி மணல் எடுத்துச் செல்வதை தடுக்க முடியும். அனுமதியின்றி மணலை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசாரும், போக்குவரத்து ஆய்வாளர்களும் முறையாக சோதனையும், தணிக்கையும் செய்தால் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை தடுக்க முடியும். எனவே மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story