சத்தாரா அணையில் மூழ்கி மும்பை மாணவர்கள் 2 பேர் பலி


சத்தாரா அணையில் மூழ்கி மும்பை மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jan 2018 4:44 AM IST (Updated: 29 Jan 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

சத்தாரா அணையில் மூழ்கி மும்பை கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 2 மாணவர்கள் பலியானார்கள்.

மும்பை,

மும்பை டாடா கல்வி நிறுவனத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுமியாஜித் ஹரிபிரசாத் (வயது25) மற்றும் சட்டடீஸ்கரை சேர்ந்த அவினாஷ். இவர்கள் தங்களுடன் படிக்கும் மேலும் 2 நண்பர்களுடன் மும்பை நேவிநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

இந்தநிலையில் நண்பர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சத்தாரா மாவட்டம் வய் தாலுகாவில் உள்ள தோம் அணைக்கு சென்றனர். இதில், சவுமியாஜித் ஹரிபிரசாத் மற்றும் அவினாஷ் ஆகியோர் அணையில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். மற்ற 2 பேரும் கரையில் அமர்ந்து இருந்தனர்.

இந்தநிலையில் திடீரென அணையில் குளித்துக்கொண்டு இருந்த 2 பேரும் மாயமாகினர். வெகுநேரமாக 2 பேரும் மேலே வராததால் கரையில் அமர்ந்து இருந்த நண்பர்கள் உதவிகேட்டு அலறினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதி மக்களுடன் மாணவர்களை அணையில் இறங்கி தேடினர். ஆனால் அவர்களால் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய மாணவர்கள் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story