அரசு மானியத்துடன் இருசக்கர வாகனம் பெற பழகுனர் உரிமம் இருந்தால் பெண்கள் விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல்


அரசு மானியத்துடன் இருசக்கர வாகனம் பெற பழகுனர் உரிமம் இருந்தால் பெண்கள் விண்ணப்பிக்கலாம், கலெக்டர் தகவல்
x

அரசு மானியத்துடன் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு பழகுனர் உரிமம் இருந்தால் போதுமானது என்று கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.

மதுரை,

குடியரசு தினத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விரகனூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து பொதுமக்களும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். வகுப்பறை மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாத மாணவன் நாளை ஊரையும், நாட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாது. துப்புரவு பணியாளர்கள் முக்கியத்துவம் நமக்கு அவர்கள் இல்லாத போது தான் தெரியவரும். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். கூட்டு குடும்ப வாழ்க்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

ஊரகப்பகுதிகளில் பசுமை வீடு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதித்திட்டம், தனிநபர் கழிப்பறைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களை கொண்டு ஊரகப்பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மாதந்தோறும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 78 பேருக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விரகனூர் ஊராட்சியில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட நீர் நிலையம், கூடுதல் அங்கன்வாடி மையமும், ஆரம்ப சுகாதார நிலையமும், கூடுதலாக பள்ளி கட்டிடமும், சாக்கடை வசதிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். விரகனூர் ஊராட்சிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மூலம் பெண்களின் பொருளாதாரம் மேம்படும் இந்த திட்டத்தின் கீழ் அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை ஆகும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாமல் இருக்கலாம். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் அல்லது ஓட்டுனர் பழகுனர் உரிமம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story