காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சிதம்பரத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ரெயில் மறியல்


காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சிதம்பரத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 29 Jan 2018 5:15 AM IST (Updated: 29 Jan 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி சிதம்பரத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்த சம்பா பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் 28-ந் தேதி (அதாவது நேற்று) ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று விவசாய சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில் சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் சிதம்பரம் காந்தி சிலை அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மதியம் 12.30 மணி அளவில் சிதம்பரம் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது ரெயில் நிலையம் முன்பு நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் தாலுகா அம்பேத்கர், புதுச்சத்திரம் மோகன், டவுன் குமார், அண்ணாமலைநகர் ஏழுமலை மற்றும் போலீசார் ஊர்வலமாக வந்தவர்களை தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்பையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். இதற்கிடையில் மதியம் 1 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிதம்பரத்துக்கு வந்தது. அந்த ரெயிலை அனைத்து கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சம்பா பாசனத்துக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர், நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த், ம.தி.மு.க. நகர செயலாளர் சீனுவாசன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், பாசிமுத்தான் ஓடை விவசாய சங்க தலைவர் ரவீந்திரன், கான்சாகிப் வாய்க்கால் சங்க தலைவர் கண்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், துணை தலைவர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாலஅறவாழி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் உள்ளிட்ட 94 பேரை கைது செய்து ஒரு வேனில் ஏற்றி சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகில் விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரகாஷ், இளங்கோவன், தமிழக வாழ்வுரிமை கட்சி ரவிபிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்தோணிசிங், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.ஜி.ராமசந்திரன், மனிதநேய மக்கள் கட்சி நூவமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாய சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். 

Next Story