டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் மராட்டிய அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு


டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் மராட்டிய அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
x
தினத்தந்தி 29 Jan 2018 5:04 AM IST (Updated: 29 Jan 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் மராட்டியத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி முதல் பரிசை தட்டிச்சென்றது. இதற்காக பாடுபட்ட கலைஞர்களுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பை,

தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 69–வது குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். பிரதமர் மோடி மற்றும் 10 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் கண்கவர் அணிவகுப்பு, வீரர்களின் சாகசங்கள் நடைபெற்றன. மேலும் பல்வேறு மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன.

இதில் மராட்டிய மாநிலம் சார்பில் கலந்துகொண்ட சத்ரபதி சிவாஜி அலங்கார ஊர்தி அனைவரின் கண்களுக்கும் விருந்து படைத்தது. குதிரையில் சத்ரபதி சிவாஜி கம்பீரமாக செல்வதை போல தத்ரூபமாக அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு இருந்தது. மராட்டியம் சார்பில் அணிவகுப்பில் கலந்துகொண்ட இந்த ஊர்தி முதல் பரிசை தட்டிச்சென்று பாராட்டை பெற்றுள்ளது.

பிரபல கலை இயக்குனர் நிதின் தேசாய் மற்றும் குழுவினர் இந்த அலங்கார ஊர்தியை வடிவமைத்து இருந்தனர்.

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த வெற்றி பரிசை பாராட்டி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘இது ஒரு சிறந்த செய்தி. நாம் பெருமைப்படுவதற்கான தருணம். இதை சாதித்து காட்டிய அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ’’ என்றார்.

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், பரிசு வென்ற அலங்கார ஊர்தியை வடிவமைத்த கலைஞர்களை பாராட்டினார்.


Next Story