கோவை மாவட்டத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மறியல்


கோவை மாவட்டத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:00 AM IST (Updated: 29 Jan 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோவை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சாலை மறியலில் தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

தமிழக அரசு கடந்த 19-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 27-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு பஸ் கட்டணத்தை சற்று குறைந்தது. ஆனால் இது வெறும் கண்துடைப்பு. பஸ் கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பபெற வேண்டும். அதுவரை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

அதன்பேரில் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நேற்று காலை நடந்தது. இதில் நாச்சிமுத்து, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, கார்த்திக் செல்வராஜ், நா.முருகவேல்,வக்கீல் மகுடபதி, கணேஷ்குமார்(தி.மு.க.) ஆர்.ஆர்.மோகன்குமார், மு.தியாகராஜன், தூயமணி, லூயிஸ்(ம.தி.மு.க.), உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் டவுன் பஸ் நிலையம் முன்பு சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

கோவை அவினாசி ரோடு பீளமேட்டில் மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் பார்த்தசாரதி, கொ.இ.செழியன், முருகேசன், சேரலாதன், வக்கீல் மருது, செந்தமிழ் செல்வன் மற்றும் விஜயகுமார்(காங்.), ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், வெள்ளிங்கிரி, சேதுபதி(ம.தி.மு.க.) சுந்தரம்(இந்திய கம்யூ.), மேகநாதன்(மார்க்சிஸ்டு கம்யூ.)உள்பட கூட்டணி கட்சியினர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நா.கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் முன்னாள் கவுன்சிலர்கள் வெ.நா.உதயகுமார், நந்தகுமார்(தி.மு.க.), மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கே.சி.கருணாகரன்(மார்க்சிஸ்டு கம்யூ.) மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

கோவை உக்கடம் பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வீனஸ் மணி, காந்தகுமார், சாந்தகுமார், ராம்கி, சாய் சாதிக், (காங்),கோட்டை அப்பாஸ், முகமதுரபி, இலியாஸ் (தி.மு.க.),கோட்டை ஹக்கீம், சாகுல்அமீது (ம.தி.மு.க.),ஜெம்பாபு (மனித நேய மக்கள் கட்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பாலக்காடு சாலையில் உட்கார்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதன் பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு நடந்த சாலை மறியலுக்கு முன்னாள் கவுன்சிலர் எஸ்.எம்.சாமி தலைமை தாங்கினார். இதில் குமரேசன், இளஞ்செழியன்(தி.மு.க.), கோவை செல்வன், இருகூர் சுப்பிரமணியன்(காங்.), மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒண்டிப்புதூர் சோதனை சாவடி முன்பு நடந்த மறியலில் தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசுவரன் தலைமையில் பாபு, கோவிந்தன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கோவை விமான நிலையம் முன்பு வடக்கு மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் முன்னாள் கவுன்சிலர்கள் ரகுபதி, மோகன்ரங்கநாதன் உள்பட 170 பேர் கலந்து கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி பஸ் நிலையம் முன்பு நடந்த மறியலுக்கு பகுதி செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் கதிர்வேல், கதிர்வேல் சாமி மற்றும் ரகுராம், ராமலிங்கம்(காங்.) விஸ்வராஜ்(ம.தி.மு.க.) உள்பட 70 பேர் கலந்து கொண்டனர்.

கோவை பாலக்காடு சாலையில் நடந்த மறியலில் மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுந்தராபுரத்தில் குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் நடந்த மறியலில் ம.தி.மு.க. ஈஸ்வரன் உள்பட ஏராள மானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இதே போல கோவை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சாலை மறியலில் தி.மு.க. எம்.எல்.ஏ., உள்பட காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். தி.மு.க. கூட்டணி கட்சியினரின் சாலை மறியலினால் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story