நகராட்சி அறிவித்துள்ள கடை வாடகை உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும், முதல்-அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை


நகராட்சி அறிவித்துள்ள கடை வாடகை உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும், முதல்-அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2018 3:30 AM IST (Updated: 30 Jan 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி நகராட்சி கடை வாடகை உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சருக்கு பெரிய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை புதுச்சேரி நகராட்சி பெரிய மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராமு, செயலாளர் வேலு, செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், பன்னீர்செல்வம், ரவி, சதாசிவம் மற்றும் வியாபாரிகள் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அப்போது சிவா, எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கடைகளை ஒதுக்கீடு செய்த காலத்தில் இருந்து கடைகளுக்கும், பொது மக்களுக்கும் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இருப்பினும் நகராட்சியின் வருவாய்க்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட வாட், ஜி.எஸ்.டி., வருமானம், நகராட்சி வரிகளான தொழில், மின்சாரம், உணவு உரிமம், எடை அளவு முத்திரை, தொழிலாளர் துறை உரிமம் உள்ளிட்ட வரிகள் மற்றும் முதலீட்டுக்குரிய கடன், வட்டி, வாடகை போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டு பெரிய மார்க்கெட்டில் 75 சதவீத வியாபாரம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் கடையின் மாத வாடகையை உயர்த்தி அறிவித்துள்ளது. இது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாடகை உயர்வு என்பது வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. எனவே வியாபார சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உயர்த்தப்பட்ட கடை வாடகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி துறை அமைச்சரிடம் கலந்து பேசி வியாபாரிகள், வியாபார சங்க நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். 

Next Story