பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:00 AM IST (Updated: 30 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி நீலகிரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. நீலகிரி மாவட்டத்திலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தின் முன்பு தி.மு.க. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை யிலும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 47 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஊட்டி எம்.எல்.ஏ.வுமான ஆர்.கணேஷ் முன்னிலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறைபிடித்து பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 89 பேரை கைது செய்தனர்.

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் தலைமையில் முன்னாள் நகர சபை தலைவர் அன்னபுவனேஸ்வரி மற்றும் வெண்ணிலா, தாஹீர் உள்ளிட்ட தி.மு.க.வினர் கட்சி கொடிகளை ஏந்தியவாறு மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 58 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி சூண்டியில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து நியூகோப் போலீசார் மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்து ஒரு வேனில் கூடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கூடலூர் அருகே தேவர்சோலை பஜாரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் லியாகத்அலி தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கூடலூர்- சுல்தான்பத்தேரி இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்கு நின்றிருந்த தேவர்சோலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 71 பேரை கைது செய்தனர். மேலும் நடுவட்டம் பஸ் நிலையம் முன்பு ஹரிதாஸ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 தி.மு.க.வினரை நடுவட்டம் போலீசார் கைது செய்தனர். கூடலூர் பகுதியில் மொத்தம் 172 பேர் கைது செய்யப்பட்டனர்.

பந்தலூர் பகுதியில் 7 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். தேவாலா பஜாரில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சேகர் தலைமையில் 42 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தேவாலா போலீசார் கைது செய்தனர். பந்தலூர் பஜாரில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரபிரபு, மகேசன், காங்கிரஸ் ஜெய்சல் உள்பட ஏராளமானவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் ஞானரவி உள்ளிட்ட போலீசார் 107 பேரை கைது செய்தனர்.

உப்பட்டி பஜாரில் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 54 பேரை தேவாலா போலீசார் கைது செய்தனர். எலியாஸ் கடைபிரிவு பகுதியில் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலைமையில் 7 பெண்கள் உள்பட 46 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பிதிர்காடு பஜாரில் மறியலில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அன்வர் தலைமையில் ஞானசேகர் உள்பட 46 பேரை அம்பலமூலா போலீசார் கைது செய்தனர்.

நெலாக்கோட்டை பஜாரில் மாவட்ட பிரதிநிதி சிவக் குமார் தலைமையில் 8 தி.மு.க.வினரை நெலாக்கோட்டை போலீசார் கைது செய்தனர். எருமாடு பஜாரில் தி.மு.க. கிளை செயலாளர் சந்திரபோஸ், நிர்வாகி நவுபல் உள்பட 17 பேர் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை எருமாடு போலீசார் கைது செய்தனர். பந்தலூர் பகுதியில் மொத்தம் 320 பேர் கைது செய்யப் பட்டனர்.

மஞ்சூர் பஜாரில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க.மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமை தாங்கினார். முன்னாள் கீழ்குந்தா பேருராட்சி தலைவர் கே.சின்னான், காங்கிரஸ் வட்டார தலைவர் நேரு, கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆரி, கம்யூனிஸ்டு தலைவர் ரகுநாதன் மற்றும் 2 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

எமரால்டு பஜாரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவன் தலைமையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். மஞ்சூர் அருகே கைக்காட்டி பஜாரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. அவை தலைவர் ஜி.பில்லன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 31 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கோத்தகிரி பஸ்நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்ஸ்போ செந்தில் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 57 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரும், ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 6 பேரும், காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் முன்னாள் தி.மு.க ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 23 பேரும், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் எஸ்.கைகாட்டி பகுதியில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

குன்னூரில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மவுண்ட் ரோடு வழியாக குன்னூர் பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு பஸ் கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 1046 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story