வக்கீல்கள் சேமநல நிதி திட்டத்தில் எத்தனை பேர் ஆயுள் சந்தா செலுத்தி உள்ளனர், விவரம் தெரிவிக்க பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வக்கீல்கள் சேமநல நிதி திட்டத்தில் எத்தனை பேர் ஆயுள் சந்தா செலுத்தி உள்ளனர், விவரம் தெரிவிக்க பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல்கள் சேமநல நிதி திட்டத்தில் எத்தனை பேர் ஆயுள் சந்தா செலுத்தி உள்ளனர் என்ற விவரம் தெரிவிக்க பார் கவுன்சிலுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த வக்கீல் பாஸ்கர்மதுரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு 28.3.2018 அன்று தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிடும் வக்கீல்களுக்கு 7 நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு, இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 நிபந்தனைகளுடன் கூடுதலாக வேட்புமனுவுடன் தனது பெயர் மற்றும் மனைவி, சட்டப்பூர்வ வாரிசுகள், பெற்றோர், உடன் பிறந்தவர்களின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்யவும், தங்கள் மீது போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும் தெரிவிக்கவும் உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு குழுத்தலைவர், இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில் பார் கவுன்சில் நடவடிக்கையில் சிலர் தேவையில்லாமல் தலையிட்டு தொந்தரவு செய்து வருதாக குறிப்பிட்டுள்ளார். பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க தலா ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தலுக்கு ஒவ்வொருவரும் 3 கோடி முதல் 4 கோடி வரை செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

எனவே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுவுடன் சொத்து விவரங்களையும், குற்ற வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்யவும், வக்கீல்களின் முன்நடத்தை குறித்து டி.ஜி.பி.யிடம் அறிக்கை பெறவும், தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதி தலைமையில் பறக்கும்படை அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகம்-புதுவை பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதி பார்முலாவை பின்பற்றி நடப்பது போல கருதத்தோன்றுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கில் வருமான வரித்துறை தலைமை இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்த்தும், வக்கீல்கள் சேமநலநிதியில் எத்தனைபேர் ஆயுள் சந்தா செலுத்தி உள்ளனர் என்று பார் கவுன்சில் செயலாளர் நாளை(இன்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story