மின் வாரிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்


மின் வாரிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 3:00 AM IST (Updated: 30 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

பெட்டிக்கடைக்கு மின் இணைப்பு வழங்ககோரி மாற்றுத்திறனாளி வாலிபர் தனது குடும்பத்தினருடன் வெங்கல் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 35). இவர், கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஆவார். இவர், வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

அறுபது சதவீதம் கண் பார்வை குறைபாடு உடைய செல்வக்குமார், மாற்று திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் சாலை புறம்போக்கு இடத்தில் உள்ள தனது கடைக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குமாறு கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பேரில் திருவள்ளூர் தாசில்தார், சாலை புறம்போக்கு இடத்தில் உள்ள செல்வக்குமாரின் கடைக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குமாறு மின்வாரிய உதவி பொறியாளருக்கு கடிதம் அனுப்பினார்.

ஆனால், அந்த கடிதத்துக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை எனவும், மின் இணைப்பு வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறி நேற்று மதியம் செல்வக்குமார் தனது குடும்பத்தினருடன் வெங்கல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மேலும், மின் வாரிய அதிகாரிகளிடம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு மின்வாரிய அதிகாரிகள், தற்காலிக மின் இணைப்பு வழங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் வாங்கிக்கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தனர். அதன்பேரில் முற்றுகையை கைவிட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். 

Next Story