திண்டுக்கல் வியாபாரி கொலை: அண்ணன்-தம்பி உள்பட8 பேர் கைது


திண்டுக்கல் வியாபாரி கொலை: அண்ணன்-தம்பி உள்பட8 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2018 3:30 AM IST (Updated: 30 Jan 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வியாபாரி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி முருகேஸ்வரி. சண்முகவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சக்திவேல் (வயது 22), தட்சிணாமூர்த்தி (20) ஆகிய மகன்களும், கீதாலட்சுமி (19) என்ற மகளும் இருந்தனர். இதில் கீதா லட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

சக்திவேல் முத்தழகுபட்டியில் கடலை மிட்டாய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து சக்திவேல் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முத்தழகுபட்டியை சேர்ந்த அமல்ராஜ் மகன் அலெக்ஸ்ராஜ் (வயது 22) மற்றும் சிலர் சேர்ந்து சக்திவேலை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சபியுல்லா மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது நள்ளிரவில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அலெக்ஸ்ராஜ் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய அலெக்ஸ்ராஜின் அண்ணன் அந்தோணி டேவிட் என்ற டெனி (24), அதே பகுதியை சேர்ந்த ஜான்விவேக் (23), டோமினிக் (23), செபஸ்தியார் (40), மணி என்ற ஸ்டீபன் (24), ஆகாஷ் (25), அலெக்ஸ்ராஜின் உறவினர் மதலைமுத்து மனைவி அமலிபுஷ்பம் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள், கொலை குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

அலெக்ஸ்ராஜூம், கீதா லட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனை கீதா லட்சுமியின் அண்ணன்கள் சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். பின்னர் அலெக்ஸ்ராஜூம், கீதா லட்சுமியும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து போலீசார் மூலம் சமாதானம் செய்து கீதா லட்சு மியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கீதா லட்சுமியை அவருடைய அண்ணன்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் தன்னுடைய காதலி சாவுக்கு காரணமாக இருந்த சக்திவேல் மற்றும் தட்சிணாமூர்த்தியை தீர்த்துக்கட்ட அலெக்ஸ்ராஜ் முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு மிட்டாய் கடையில் இருந்தபோது தட்சிணாமூர்த்தியை, அலெக்ஸ்ராஜ் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இதேபோல சக்திவேலையும் கொலை செய்ய திட்டமிட்டு அவரை கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் வியாபாரம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வெட்டி கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story