ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 3:15 AM IST (Updated: 30 Jan 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திடீரென உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்தல், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய இடங்களிலும் மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்து உள்ளது. ஆனால் பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10.30 மணி அளவில் மாணவ-மாணவிகள் வகுப்புகளில் இருந்து வெளியேறி கல்லூரி முன்பு திரண்டனர். சுமார் 750 மாணவ-மாணவிகள் கல்லூரியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து கல்லூரியின் மாணவர் பேரவை தலைவர் சதீஸ் கூறும்போது, “பஸ் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை சிரமப்பட்டு செலுத்துகிறார்கள். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வு என்பது கூடுதல் நிதிச்சுமையாக அவர்களுக்கு உள்ளது. எனவே தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான தொகை உயர்த்தப்பட்டு, கிலோ மீட்டருக்கு சில காசுகளை குறைத்து இருப்பது கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். எனவே பஸ் கட்டணத்தை மேலும் குறைக்க தமிழக அரசு முன் வரவேண்டும்”, என்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையிலான போலீசார், மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று போலீசார் கூறினார்கள். அதன் பின்னர் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.

கல்லூரியின் முன்பு மாணவ-மாணவிகள் நடத்திய போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story