பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. - கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம்


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. - கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 3:15 AM IST (Updated: 30 Jan 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த 3,712 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 29-ந் தேதி முதல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனிடையே நேற்று முன்தினம் தமிழக அரசு, பஸ் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த பஸ் கட்டண குறைப்பு என்பது கண் துடைப்புதான் என்றும் பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், இந்த கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் வீரவாழியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பொன்.கவுதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், காங்கிரஸ் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், துணைத்தலைவர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், நகர செயலாளர் சம்பந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் குப்புசாமி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தினால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் 45 பெண்கள் உள்பட 295 பேரை கைது செய்து போலீஸ் வேன், தனியார் வாகனங்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் விக்கிரவாண்டி பஸ் நிறுத்தம் அருகில் ராதாமணி எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 104 பேரும், கூட்டேரிப்பட்டில் மாசிலாமணி எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 114 பேரும், திண்டிவனம் மேம்பாலம் அருகில் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், டாக்டர் சேகர், வக்கீல் ஆதித்தன் உள்பட 40 பேரும், செஞ்சி கூட்டுரோட்டில் மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஸ்ரீரங்க பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன், ம.தி.மு.க. மாநில துணை பொது செயலாளர் மணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஜய குமார், நகர செயலாளர் காஜாநஜீர் உள்பட 255 பேரும், பகண்டை கூட்டுசாலையில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 200 பேரும், சின்னசேலத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 290 பேரும், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கண்டமங்கலத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 85 பேரும், காணையில் ஒன்றிய செயலாளர் கல்பட்டுராஜா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 150 பேரும், வெள்ளிமேடுபேட்டையில் ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், ஒலக்கூரில் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 70 பேரும், திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நகர செயலாளர் கபிலன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் அசோகன், வசந்தா, காங்கிரஸ் நகர தலைவர் விநாயகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் உள்பட 60 பேரும், முருக்கேரியில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 57 பேரும், டி.நல்லாளம் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் நமச்சிவாயம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 50 பேரும், நாட்டார்மங்கலத்தில் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும், மேல்மலையனூரில் செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 103 பேரும், அரும்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 130 பேரும், திருக்கோவிலூரில் தொகுதி செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும், அரகண்டநல்லூரில் ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 95 பேரும், கண்டாச்சிபுரத்தில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 144 பேரும், சங்கராபுரத்தில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 165 பேரும், மேல்சிறுவள்ளூரில் ஒன்றிய செயலாளர் முனியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 120 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் முரளி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 84 பேரும், மரக்காணத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70 பேரும், அனுமந்தையில் ஒன்றிய தலைவர் சந்தானமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரும், வெள்ளிமலையில் ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும், தியாகதுருகத்தில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 110 பேரும், உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 100 பேரும், களமருதூரில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70 பேரும், கெடிலத்தில் ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 85 பேரும், அரசூரில் ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 68 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story