விவசாயிகள் உள்பட 6 பேர் தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


விவசாயிகள் உள்பட 6 பேர் தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்பட 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அழகனம்பட்டி, மாதங்காடு, பாப்பிசெட்டிப்பட்டி காலனி, பெரும்பள்ளம் மேடு ஆகிய பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். அவர்கள் அனைவரும் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்களில் அழகனம்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(வயது 37), கோவிந்தராஜ்(36), பெரும்பள்ளம் மேட்டை சேர்ந்த முத்து (77) ஆகியோர் 2 லிட்டர் கேனில் மண்எண்ணெயை மறைத்து வைத்து உள்ளே எடுத்து சென்றுள்ளனர்.

கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு திடீரென விவசாயிகள் ராஜசேகர், கோவிந்தராஜ், முத்து ஆகியோர் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றினர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டில்களை பறித்தனர். இதையடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2007-ம் ஆண்டு கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பாப்பிசெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் பள்ளியில் இருந்து பெரும்பள்ளம் மேடு வரை அரசு நிதியில் சாலை போடப்பட்டது. இதன் வழியாக தான் எங்கள் ஊரில் இருந்து கோவிலுக்கும், பஸ் நிறுத்தத்திற்கும், ரேஷன் கடைக்கும் சென்று வந்தோம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளும் இதன் வழியாக சென்றனர்.


இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி ஆதிதிராவிடர் பள்ளியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை 6 பேர் வெட்டி சேதப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் தற்போது அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திலும், காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சாலையை வெட்டி சேதப்படுத்திய 6 பேர் மீது நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கக்கோரி தற்கொலை செய்யும் முயற்சியில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(37). இவருடைய மகள் திவ்யா(13) ராசிபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மணிகண்டன் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்கு திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அங்கு விரைந்து சென்று தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டில்களை பறித்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் மணிகண்டன் கூறும் போது, ‘நான் 2013-ம் ஆண்டு தெரிந்த நபர்கள் 3 பேரிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கினேன். இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனாலும் அவர்கள் என்னிடம் மேலும் ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த நான் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றேன்‘ என்றார்.

விவசாயிகள் உள்பட 6 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story