பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம்


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3,884 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கடந்த 20-ந் தேதி தி.மு.க. தலைமையில் அதன் கூட்டணி கட்சியினருடன் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை மொத்தமாக திரும்ப பெறக் கோரி நேற்று தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்படி நேற்று திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்பட தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்திற்கு எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 22 பெண்கள் உள்பட 437 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் செங்கம், போளூர், வந்தவாசி உள்பட மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, கே.வி.சேகரன், மு.பெ.கிரி, அம்பேத்குமார் உள்பட 3 ஆயிரத்து 884 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story