தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம்


தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 50 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 6 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

தமிழக அரசு கடந்த 20-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நேற்றுமுன்தினம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் 29-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்டம் வலுத்து வருவதால் பஸ் கட்டண உயர்வின் ஒரு பகுதியை தமிழக அரசு குறைத்தது. ஆனால் உயர்த்தப்பட்ட முழு கட்டணத்தையும் திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

காட்பாடியில் சித்தூர் பஸ்நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் மாணவர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், மண்டலக்குழு முன்னாள் தலைவர் சுனில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஞானவேல், காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர் காமராஜ் உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

பொதுமக்கள், மாணவர்கள் உள்பட அனைவரின் கோரிக்கையும் பஸ் கட்டண உயர்வை முழுமையாக குறைக்கப்பட வேண்டும் என்பது தான். பஸ் கட்டண குறைப்பில் என்ன சலுகையை கொடுத்துள்ளார். பிச்சைக்காரர்களுக்கு போடுவதுபோல் 5 பைசா 10 பைசா குறைத்துவிட்டு கட்டணத்தை முழுமையாக குறைக்க முடியாது என்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் காலம் நெருங்கிவிட்டது. பஸ் கட்டண உயர்வை பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பது அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ளுக்குள் இருக்குற ரகசிய ஒப்பந்தம். பஸ் கட்டணம் மட்டுமின்றி எந்த வரியையும் போடாமல் ஆட்சி நடத்தியது தி.மு.க..

நெருக்கடியை சமாளித்து ஆட்சி நடத்த கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும். மத்திய பட்ஜெட்டில் சேது சமுத்திர திட்டம் இடம்பெற வேண்டும், கச்சத்தீவை மீட்டு தரவேண்டும், சேலம் உருக்கு ஆலையை எக்கு ஆலையாக மாற்ற வேண்டும் போன்றவற்றை எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நடந்த இந்த மறியல் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சத்துவாச்சாரியில் வட்டார போக்குவரத்து அலுவலக சாலை சந்திக்கும் இடத்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.பி.ஏழுமலை தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை முத்துக்கடையில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆற்காடு பஸ்நிலையத்தில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் சரவணன், மாவட்ட துணைசெயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில், ஆலங்காயம் ரோட்டில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டதாக 6 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story