கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரிக்கை


கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாகர்கோவில் மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். கூலி வேலைக்கு செல்லும் தந்தையிடம் தேர்வு கட்டணத்தையே தயங்கி தயங்கி கேட்கும் மாணவ-மாணவிகள், தற்போது தினமும் பஸ்சுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டி இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்டத்திலும் பல்வேறு கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகர்கோவில் இந்து கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்து கல்லூரிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் மனு அளித்தனர். அவர்களுடன் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியை சேர்ந்த சில மாணவர்களும், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் சென்றனர்.

இதேபோல் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவ-மாணவிகளும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கல்லூரி மாணவர் பேரவை தலைவர் பிரடி தலைமை தாங்கினார். செயலாளர் சதீஸ், மாணவிகள் பிரதிநிதி சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நடந்தது. 

Next Story