ராயபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றி மூடிக்கிடக்கும் கழிவறைகள் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ராயபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றி மூடிக் கிடக்கும் கழிவறைகள் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சென்னை,
சென்னை ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளை இணைக்கும் சாலையாக அமைந்துள்ள பகுதி எம்.சி. ரோடு மற்றும் ஜி.ஏ. ரோடு ஆகும். சென்னையின் குட்டி தி.நகர் என அழைக்கப்படும் இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான துணிக்கடைகள் அமைந்துள்ளன.
தினமும் குவியும் மக்கள் கூட்டம்
துணி எடுப்பதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் ராயபுரம் எம்.சி. ரோடு வந்து செல்கின்றனர். ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் இருந்து துவங்கும் இந்த ஜி.ஏ. ரோடு பழைய வண்ணாரப்பேட்டை தண்ணீர் தொட்டி பஸ் நிலையம் வரை செல்கிறது. விழாக்காலம் மட்டுமில்லாமல் சாதாரண விடுமுறை நாட்களிலேயே இந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான கழிப்பிட வசதிகள் அதிகளவில் இல்லை. இந்த பகுதியில் 2 அல்லது 3 கட்டண கழிப்பிடங்களே செயல்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை கல்மண்டபம் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டணமில்லா கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் அந்த கழிப்பிடம் தற்போது பயனற்று கிடக்கிறது.
தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் மற்றும் ஜி.ஏ. ரோட்டிலிருந்து எம்.சி. ரோட்டில் நுழையும் பகுதியில் கல்மண்டபம் சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பிடம் தற்போது செயல்படாமல் இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
எனவே எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பயனற்று கிடக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டணமில்லா கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அதனை முறையான பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் எம்.சி ரோட்டிற்கு வந்து செல்லும் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகவும் அமைந்துள்ளது.
Related Tags :
Next Story