கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது


கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 30 Jan 2018 5:15 AM IST (Updated: 30 Jan 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து கிருஷ்ணா நதிநீர் வருவதால் கடந்த 28 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது.

சென்னை, 

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நிதிநீர் ஒப்பந்தப்படி கடந்த 2-ந்தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலில் ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர், அதன்பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2,400 கனஅடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 21 கனஅடி வீதம் வந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 350 கனஅடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்மட்டம் உயர்வு

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 2-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பூண்டி ஏரியில் நீர்மட்டம் 26.05 அடியாக பதிவானது. 1,012 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது.

நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 28.05 அடியாக உயர்ந்து உள்ளது. 1,329 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது கடந்த 2-ந் தேதி முதல் நேற்று காலை வரை 28 நாட்களில் ஏரியின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உயரும்

கண்டலேறு அணையில் இருந்து 28 நாட்களில் 650 மில்லியன் கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story