கவுரி லங்கேஷ் குடும்பத்தில் கருத்து வேறுபாடு


கவுரி லங்கேஷ் குடும்பத்தில் கருத்து வேறுபாடு
x
தினத்தந்தி 30 Jan 2018 4:10 AM IST (Updated: 30 Jan 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

கவுரி லங்கேஷ் குடும்பத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அரசு உதவியுடன் விழா நடத்துவதாக இந்தரஜித் லங்கேஷ் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கர்நாடக அரசின் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்து சுமார் 5 மாதங்கள் ஆகியும் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் கவுரி லங்கேசின் பிறந்த தினத்தையொட்டி அவருடைய சகோதரர் இந்தரஜித் லங்கேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று பெங்களூருவில் உள்ள கவுரி லங்கேசின் சமாதிக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கவுரி லங்கேஷ் பிறந்த தினத்தை கவுரி தினம் என்ற பெயரில் கொண்டாட எனது சகோதரி கவிதா லங்கேஷ் ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவுக்கு அரசு நிதி உதவி செய்கிறது. மேலும் விழாவுக்கு வந்துள்ள சமூக ஆர்வலர்கள் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் ஆகியோருக்கு விமான டிக்கெட் செலவை கர்நாடக அரசே செய்துள்ளது. கவுரி லங்கேஷ் கொலையில் கர்நாடக அரசு அரசியல் செய்வது சரியல்ல.

எனது சகோதரியின் கொலையில் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அரசு தரும் அழுத்தம் காரணமாக சிறப்பு விசாரணை குழுவினர் ஒரே கோணத்தில் விசாரணை நடத்துகிறார்கள். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறும்“ என்றார்.

இதற்கு பதிலளித்த அவருடைய சகோதரி கவிதா லங்கேஷ், “இந்த கவுரி தின விழாவுக்கு நான் ஏற்பாடு செய்தேன். இதற்கான செலவு எங்கள் அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிதி உதவி எதையும் வழங்கவில்லை. கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழு நல்ல முறையில் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் எங்களுக்கு விசாரணையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்து தகவல்களை தருகிறார்கள். இது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அதனால் இதில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை“ என்றார்.

கவுரி லங்கேஷ் கொலையில் அவருடைய குடும்பத்தினர் இருவேறு கருத்துகளை கூறி இருப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு பகிரங்கமாகி இருக்கிறது.

Next Story