பெங்களூருவில் சட்டசபை தேர்தலில் கால்பதிக்க விரும்பும் கவுன்சிலர்கள்


பெங்களூருவில் சட்டசபை தேர்தலில் கால்பதிக்க விரும்பும் கவுன்சிலர்கள்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:46 AM IST (Updated: 30 Jan 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களாக கால் பதிக்க மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உள்பட பல்வேறு கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களாக கால்பதிக்க சில மாநகராட்சி கவுன்சிலர்கள் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மாநகராட்சி மேயரும், தமிழருமான சம்பத்ராஜ், கவுன்சிலர்களான பத்மாவதி, உமேஷ் ஷெட்டி, இம்ரான் பாஷா, ஹேமலதா கோபாலய்யா, சிவராஜூ, ஆர்.வி.யுவராஜ், சாந்தகுமாரி உள்ளிட்டவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில் டிக்கெட் கேட்டு தங்களது கட்சி மேலிடங்களை நாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக முன்னாள் மேயரான பத்மாவதி தற்போது பிரகாஷ் நகர் வார்டில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வாகி உள்ளார். முந்தைய சட்டசபை தேர்தலில் ராஜாஜி நகர் தொகுதியில் வேட்பாளராக களம்கண்ட அவர் பா.ஜனதா வேட்பாளரான ரமேஷ் குமாரிடம் தோல்வி அடைந்தார்.

பின்னர் நடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரான பத்மாவதிக்கு கடந்த ஆண்டு மேயர் பதவி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் காங்கிரஸ் சார்பில் ராஜாஜிநகர் சட்டசபை தொகுதியில் இருந்து களம் இறங்குவதற்கான நடவடிக்கைகளை பத்மாவதி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல், பெங்களூரு பசவனகுடி வார்டில் போட்டியிட்டு 5 முறை கவுன்சிலராக தேர்வானவர் சத்திய நாராயணா என்ற கட்டே சத்தியா. பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் மேயரும் ஆவார். இவர், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் பசவனகுடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அனுமதி கேட்டு கட்சி மேலிடத்தை நாடியுள்ளார். இந்த தொகுதியில் தற்போது பா.ஜனதாவை சேர்ந்த ரவி சுப்பிரமணியா என்பவர் எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் குமாரசாமி லே-அவுட் வார்டு கவுன்சிலரான சீனிவாசும் கட்சி மேலிட கதவை தட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், பெங்களூரு மாநகராட்சி மேயராக உள்ள சம்பத்ராஜ், சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட ஆர்வமாக உள்ளார். இதற்கான முயற்சியில் அவர் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், வருகிற சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட தற்போதைய மந்திரியும், முதல்-மந்திரி சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளருமான மகாதேவப்பா முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார்.

அதேபோல், சங்கர்மடம் வார்டின் காங்கிரஸ் கவுன்சிலரான சிவராஜூ, மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் இருந்து களம்காண ஆர்வமாக உள்ளார். அத்துடன் பாதராயனபுரா வார்டின் ஜனதாதளம்(எஸ்) கவுன்சிலர் இம்ரான் பாஷா, சாம்ராஜ்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ஜமீர் அகமதுகான், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி உள்ளதால் அந்த தொகுதியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட இம்ரான் பாஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்கள் தவிர மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் களான என்.ஆர். ரமேஷ், நாகராஜ், எஸ்.ஹரீஷ் உள்பட சிலரும் தாங்கள் சார்ந்த கட்சியின் சார்பில் பெங்களூருவில் உள்ள தொகுதியில் களம்காணும் நோக்கத்தில் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பெங்களூருவில் உள்ள சட்டசபை தொகுதிகளில் தாங்கள் சார்ந்த கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.வாக உள்ளவர்கள், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள், தற்போதைய கவுன்சிலர்கள் என பல்வேறு தரப்பினர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், யார் யாருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட ‘டிக்கெட்‘ கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story