ரெயில் கடந்து சென்றது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பியவரால் பரபரப்பு


ரெயில் கடந்து சென்றது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2018 5:14 AM IST (Updated: 30 Jan 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் கடந்து சென்றபோது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பை குர்லா ரெயில்நிலைய 5-ம் நம்பர் பிளாட்பாரத்தில் ஒருவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இந்தநிலையில் அந்த பிளாட்பாரத்தில் தொலைதூர ரெயில் ஒன்று வருவதை கண்ட அந்த நபர், திடீரென தண்டவாளத்தில் குதித்து கீழே படுத்துக்கொண்டார். இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சியில் அலறினார்கள். மேலும் அந்த நபரை எழுந்து செல்லுமாறு சத்தம்போட்டனர்.

இதற்கிடையில் வேகமாக வந்த அந்த ரெயில் அந்த நபரை கடந்து சென்றது. இதில், அதிர்ஷ்டவசமாக அந்த நபர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். இதன்பின்னர் அந்த நபர் அங்கிருந்து எழுந்து சர்வ சாதாரணமாக நடந்து சென்றார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில், அவரது பெயர் விஷால் வன்சாடே என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஷால் வன்சாடேயின் பெற்றோரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி அறிவுரை கூறினர். மேலும் போலீசார் அவரது பெற்றோரை கடுமையாக எச்சரித்து அவரை ஒப்படைத்தனர்.

முன்னதாக விஷால் வன்சாடே தண்டவாளத்தில் படுத்த திகில் காட்சிகள் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் செய்தி சேனல்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல சில நாட்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ரெயில் வரும் முன்பு தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story