இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - டிப்ளமோ படிப்பு தகுதி


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை - டிப்ளமோ படிப்பு தகுதி
x
தினத்தந்தி 30 Jan 2018 9:15 AM GMT (Updated: 30 Jan 2018 9:15 AM GMT)

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்தியன் ஆயில் எனப்படும் இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின், தெற்கு மண்டல கிளையில் தற்போது நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு 51 இடங்களும், ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு 46 இடங்களும், ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு ஒரு இடமும் உள்ளது. இந்த பணியிடங்கள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானதாகும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன லைசென்ஸ் (ஹெவி) பெற்றவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் ஏவியேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வு சோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-2-2018-ந் தேதியாகும். நகல் விண்ணப்பம் 16-2-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

101 அப்ரண்டிஸ் பணிகள்

மற்றொரு அறிவிப்பின்படி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 9 சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. 31-1-2018-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 3-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நகல் விண்ணப்பத்தை 17-2-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story