சொத்தவிளையில் மூதாட்டி கொலை: மேலும் ஒருவர் கைது பரபரப்பு வாக்குமூலம்


சொத்தவிளையில் மூதாட்டி கொலை: மேலும் ஒருவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 30 Jan 2018 11:50 PM IST)
t-max-icont-min-icon

சொத்தவிளையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

 தூத்துக்குடி மாவட்டம் பூபாண்டிபுரத்தை சேர்ந்த நாகுவின் மனைவி சடச்சி (வயது 68). இவர் கடந்த மாதம், சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து காணிக்கை வசூல் செய்வதற்காக நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரத்துக்கு வந்தார்.  

இந்தநிலையில் கடந்த மாதம் 28–ந் தேதி குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சொத்தவிளை கடற்கரையில், தென்னந்தோப்பில் சடச்சி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் காணிக்கை பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலையில் நெல்லை மாவட்டம் உடையன்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (47), இவரது மனைவி துளசி (29), நெல்லை பேட்டை, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சிங்ககுமார் (29), ஆட்டோ டிரைவர் நல்லமுத்து குமார் (22) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, மந்திரமூர்த்தி, துளசி, சிங்ககுமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ டிரைவர் நல்லமுத்து குமார் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், நல்லமுத்து குமாரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் மந்திரமூர்த்தி போலீசாரிடம் கூறியதாவது:–

எனது மனைவி துளசியின் உறவினர் ஒருவர் கன்னியாகுமரியில் இருந்து மாலை போட்டு சபரிமலைக்கு செல்ல முடிவு செய்திருந்தார். இதில் கலந்து கொள்வதற்காக நாங்கள் 4 பேரும் ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு வந்தோம். கன்னியாகுமரியில் நாங்கள் டீக்குடிக்க சென்ற போது, சடச்சி கையில் காணிக்கை பணத்துடன் நிற்பதை பார்த்தோம். மேலும், அவர் காதில் தங்க நகையும் அணிந்திருந்தார்.

அதனை அபகரிக்க முடிவு செய்து நாங்கள் சடச்சியிடம் நைசாக பேச்சு கொடுத்து ஆட்டோவில் ஏற்றி சென்றோம்.

ஆட்டோவில் வைத்து அவரிடம் இருந்த பணத்தையும், நகையும் பறித்தோம். பின்னர், அவரை கொலை செய்து சொந்தவிளை கடற்கரையில் உள்ள தென்னந்தோப்பில் வீசிவிட்டு சென்றோம். அப்போது, அவரிடம் இருந்த செல்போனையும் எடுத்து சென்றேன். ஊருக்கு சென்ற பின்பு போலீசில் சிக்காமல் இருக்க சடச்சியின் செல்போனை சுவிட்– ஆப் செய்து வைத்திருந்தேன். 2 வாரங்களுக்கு பின்பு அதை ஆன் செய்தேன். இதன் மூலம் போலீசார் துப்பு துலங்கி வந்து எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான நல்லமுத்து குமார் மீது நாசரேத் உள்பட சில போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.


Next Story