திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 31 Jan 2018 4:45 AM IST (Updated: 31 Jan 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

ஈக்காடு கண்டிகை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராம ஊராட்சி செயலாளராக இருக்கும் அரிபாபு என்பவர் தேசிய ஊரக வேலை திட்ட பணியில் ஈடுபடும் பெண்களிடம், உங்களுக்கு வயதாகிவிட்டது, அதனால் வேலை இல்லை. அடுத்த மாதத்தில் இருந்து உங்களை வேலைக்கு எடுத்து கொள்ளமாட்டோம் என்று கூறி வருகிறார். மேலும் அவர் விலையில்லா ஆடுகள் வழங்குவது குறித்து நாங்கள் கேட்க சென்றபோது பணம் கொடுத்தால்தான் விலையில்லா ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என கூறி எங்களை தகாத வார்த்தையால் பேசுகிறார்.

மேலும் எங்கள் பகுதியில் தினந்தோறும் தெருக்களை சுத்தம் செய்து பிளச்சீங் பவுடர் போடவில்லை. கடந்த 26-ந்தேதியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை ஊராட்சி செயலாளர் முறையாக நடத்தாமல் கூலி ஆட்களை வைத்து நடத்தி முடித்து விட்டார். ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் அவர் ஊராட்சி செயலாளருக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே பொதுமக்களை தகாத வார்த்தையால் பேசிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட நெற்குன்றம் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நாங்கள் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட நெற்குன்றம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். எங்கள் கிராம ஊராட்சி செயலாளர் காமேஷ் என்பவர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு பயனாளிகளிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை வசூல் செய்கிறார். மேலும் அவர் தொகுப்பு வீடுகள் வேண்டுமென்றால் தனக்கு பணம் தருமாறும், இது போல அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 26-ந் தேதியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற நாங்கள் எங்களது கோரிக்கைகள் பற்றி எடுத்துக்கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தோம். எனவே நெற்குன்றம் ஊராட்சி செயலாளர் முறைகேடாக செயல்பட்டு வருவதால் அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story