பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:00 AM IST (Updated: 31 Jan 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு குடியிருப்புகளில் வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வரி செலுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வீட்டு வரி செலுத்த செல்லும்போது அடிக்கடி நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்டம் பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி பஸ் நிறுத்தத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூந்தமல்லி நகர தி.மு.க. செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் அவர் பேசுகையில்:-

நகராட்சிகளில் பதவி வகிக்கும் அதிகாரிகள் உள்ளூரில் வசிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் படும் துயரம் தெரியும்.

மேலும், வரி விதிப்பை அதிகாரிகளிடம் கொடுக்க கூடாது. ஆர்.கே. நகரில் ஒரு ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுத்தார்கள். தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். பஸ்சில் பயணம் செய்யும் மக்களில் அதிகம் பேர் ஆர்.கே. நகரில் தான் உள்ளனர். 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும் இன்னும் நடத்தவில்லை

உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் மத்திய அரசிடம் இருந்து ரூ.4 ஆயிரம் கோடி வந்து இருக்கும். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடிவுக்கு வந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையில் உள்ளது. இதனால் மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் ஆட்சி கவிழும். அடுத்து ஆட்சிக்கு வர போவது தி.மு.க.தான். இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரி கொடுப்போர் சங்கம் ஒன்றை உருவாக்கி கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிந்து நகராட்சி அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற தி.மு.க.வினர் பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்றனர் ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி மேலாளரிடம் மனு அளித்து விட்டு சென்றனர். இதில் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், முன்னாள் எம்.பி.கிருஷ்ணசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பூந்தமல்லி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

Next Story