போலீஸ் அலுவலக அமைச்சு பணியாளர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


போலீஸ் அலுவலக அமைச்சு பணியாளர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றிவரும் அமைச்சு பணியாளர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள அனைத்து அமைச்சு பணியாளர்கள் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், கணினி விபர பதிவாளர்களை இளநிலை உதவியாளர்களாக மாற்ற வேண்டும், கருணை அடிப்படையிலான பணிக்காக காத்திருப்பவர்களுக்கு காவல்துறை மற்றும் பிற துறைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும், புதிதாக வழங்கப்பட்ட களப்பணியாளர்களுக்கு இணையான அமைச்சு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாறுதல் செய்வதை நிறுத்த வேண்டும், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது போன்ற 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சு பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 2 நாட்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அமைச்சு பணியாளர்களும் தலைவர் துரைராஜ் தலைமையில் போலீஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் இளங்கோவன், துணை தலைவர் கஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story