பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி


பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் பாலியல் வன்கொடுமை, வரதட்சணை ஆகியவற்றுக்கு எதிரான பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடந்த பேரணியை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சமூக நலத்துறையின் மூலம் படித்த ஏழை, எளிய பெண்களுக்கு நிதியுதவியுடன் கூடிய 8 கிராம் தங்கம், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்காக மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, குற்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாலியல் வன்கொடுமை போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வாறு புகார்கள் அளிக்க வேண்டும். எவ்வாறு அலுவலர்களை அணுகி அதற்கான தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை பேன்றவை குறித்து குழந்தைகள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் 250 பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தஸ்நேவிஸ் மாதா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள், தங்கள் கைகளில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story