இளையான்குடி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை


இளையான்குடி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே தங்கையின் திருமணத்திற்கு தடை ஏற்படுத்தி வந்த வாலிபரை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஆனந்தசெல்வம்(வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷண்ன் மகன் வாணிஜெயராம்(22). இவர்கள் 2 பேரின் வீடுகளும் அருகருகே உள்ளன. இதற்கிடையில் வாணிஜெயராமின் தங்கையை ஆனந்தசெல்வம் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 குடும்பத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் பிரச்சினை காரணமாக வாணிஜெயராமின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு, மானாமதுரைக்கு குடிபெயர்ந்தனர். மேலும் ஆனந்தசெல்வமும் வேலை தொடர்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் அங்கிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வாணிஜெயராமின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்துவந்தனர். இதுகுறித்து அறிந்த ஆனந்தசெல்வம், திருமணத்திற்கு தடை ஏற்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தசெல்வம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் வாணிஜெயராம், ஆனந்தசெல்வத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று தாயமங்கலத்தில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாணிஜெயராம் கத்தியால் ஆனந்தசெல்வத்தை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஆனந்தசெல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாணிஜெயராமை வலைவீசி தேடி வருகிறார். 

Next Story