தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Jan 2018 3:30 AM IST (Updated: 31 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி ஊராட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் பள்ளிக் கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட தினைக்குளம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். 18 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளிக்காக புதிய வகுப்பறை கட்டிடங்கள் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடங்கள் தரமான முறையில் கட்டப்படாததால் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே இடிந்து விழும்நிலையில் உள்ளது. எனவே மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து படிக்க முடியாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

மழை நேரங்களில் அந்த கட்டிடத்தில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடந்துள்ளதை அந்த கட்டிடம் தெளிவுபடுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, கட்டிட காண்டிராக்டர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகை செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில் கட்டிடம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களில் கட்டுமானப் பணியின் தரம் குறித்து ஐ.ஐ.டி. பேராசிரியரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கவும், இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலாளர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை பிப்ரவரி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story