அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் காயம்


அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் காயம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் காயம் அடைந்தான்.

ஏரியூர்,

பென்னாகரம் அடுத்துள்ள பெரும்பாலை அரசு மேல் நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்சாரம் மூலம் தண்ணீர் உறிஞ்சி டேங்க் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச மின்சாரம் பயன்படுத்துவது மாணவர்களுக்கு ஆபத்தாக உள்ளதாகவும், இதனை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அமைக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

மின்சாரம் தாக்கியது

சாணாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவரின் மகன் பாரத்(வயது15) பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவன் பாரத் மாலை 5 மணிக்கு பள்ளி வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் குழாய் அருகே அமர்ந்து படித்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாயின் இரும்பு பைப்பில் இருந்து மின்சாரம் தாக்கி மாணவன் பாரத் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தான். இதைகண்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாணவன் பாரத் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மின்சாரம் மூலம் குடிநீர் எடுப்பதை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story