சின்னமனூரில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல்


சின்னமனூரில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 31 Jan 2018 2:45 AM IST (Updated: 31 Jan 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் நகரில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சின்னமனூர்,

சின்னமனூர் நகரில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையோர கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் நகராட்சி அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சின்னமனூர் நகருக்கு அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.

சின்னமனூர் நகரில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதில் நகர் பகுதியில் சாலையோர கடைகள் அதிகம் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்பு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை, சீப்பாலக்கோட்டை சாலை, மார்க்கையன் கோட்டை ரவுண்டானா ஆகிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சின்னமனூர் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story