வகுப்புகளை புறக்கணித்து மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டம்


வகுப்புகளை புறக்கணித்து மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகளும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காலை வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்றனர். அதன்பின்னர் 10.30 மணிஅளவில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, “பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் கிராம பகுதிகளில் இருந்து ஈரோட்டிற்கு வருகிறோம் கூடுதல் பஸ் கட்டணம் கொடுத்து கல்லூரிக்கு வர மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் பகல் 11.45 மணிஅளவில் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story