ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையை தோற்றுவித்தவர், ராஜேந்திர சோழன் தமிழர் பண்பாட்டு விழாவில், முதல்– மந்திரி பட்னாவிஸ் புகழாரம்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையை தோற்றுவித்தவர், ராஜேந்திர சோழன் தமிழர் பண்பாட்டு விழாவில், முதல்– மந்திரி பட்னாவிஸ் புகழாரம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:00 AM IST (Updated: 31 Jan 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடந்த தமிழர் பண்பாட்டு விழாவில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையை தோற்றுவித்தவர் ராஜேந்திர சோழன் என மும்பையில் நடந்த தமிழர் பண்பாட்டு விழாவில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழர் பண்பாட்டு திருவிழா

மராட்டிய தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு மும்பை கிங்சர்க்கிள் சண்முகானந்தா அரங்கில் நடந்தது. விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மும்பை பா.ஜனதா தலைவர் ஆசிஸ்செலார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள், திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆசிஸ் செலார் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் செல்வம் சுப்பையாவின் மும்பை பெருநகரம் என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை முதல்– மந்திரி ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்.

சாதனையாளர்களுக்கு விருது

பின்னர் முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் கல்வி சேவை, தொழில் மற்றும் பல்துறைகளில் மிக உயர்ந்த நிலையை அடைந்த தமிழர்களுக்கு சாதனையாளர் விருதினை வழங்கினார்.

கர்னல் பாலசுப்பிரமணியன், பிரைட் பள்ளி நிறுவனர் தேவதாசன், மும்பை காமராஜர் பள்ளி சேர்மன் ராமராஜா நாடார், நே‌ஷனல் கல்வி குழுமங்களின் தலைவர் வரதராஜன், பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளி நிர்வாகி கே.வி.அசோக்குமார், தொழில் அதிபர்கள் வேலு, ஜே.பி.ஆர்.ராஜா, சுவாமி பிள்ளை, ராஜேந்திரன் சுவாமி, வே.குமார், ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜாமணி, ஆசிரியை அனிதாடேவிட் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பாரம்பரியத்தை மறக்கவில்லை

இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனைவருக்கு வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

மராட்டியத்தில் அதிகளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். இதேபோல தமிழகத்திலும் மராட்டியர்கள் வாழ்ந்து வருகின்றனர். மராட்டியர்கள், தமிழர்கள் இடையே பழங்காலத்தில் இருந்தே இணக்கமான நல்உறவு இருந்து வருகிறது. மும்பையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தபோதும் தமிழர்கள் தங்கள் பாரம்பரியம், கலாசாரத்தை மறக்காமல் பின்பற்றி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியின் போது சயான் கோலிவாடா, தாராவி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகரை வழிபட சென்றேன். அப்போது அங்கு தமிழ், மராட்டிய கலாசாரம் கலந்து இருந்ததை பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

ராஜேந்திர சோழன் கடற்படை

தமிழ் மிகவும் பழமையான மொழி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையை தோற்றுவித்து ராஜேந்திர சோழன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருவள்ளுவர் 1¾ அடியில் வாழ்க்கையின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் கூறியுள்ளார். கலாசாரம், பண்பாடு வேறுவேறாக இருந்தாலும் தமிழர்களும், மராட்டியர்களும் ஒருவர் மீது ஒருவர் அன்பை செலுத்தி வருகின்றனர்.

கேப்டன் தமிழ்ச்செல்வன் ஒருநாளும் கட்டுமான அதிபர்கள், தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக என்னை வந்து சந்தித்தது கிடையாது. எப்போதும் ஏழை எளிய மக்கள், குடிசைவாசிகளின் பிரச்சினைகளுக்காக தான் என்னை வந்து பார்ப்பார். தனது தொகுதிக்கு வெளியே உள்ள மக்களுக்கும் உதவிகள் செய்து வரும் ஒரே எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வனாக தான் இருப்பார் என உறுதியாக கூறுகிறேன்.

இவ்வாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

மும்பை தின கொண்டாட்டம்

இதைத்தொடர்ந்து விழாவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக எப்போது சந்தித்தாலும் முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நமக்கு தேவையானதை உடனடியாக செய்து வருகிறார். சயானில் அரசு ஆஸ்பத்திரி கட்டவும், சிட்கோவில் தமிழ்நாடு பவன் அமைக்கவும் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். கிர்காவில் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி நடந்தபோது, திடீரென மேடையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த அதிகாரிகள், மேடையில் சிலிண்டர் கிடப்பதாகவும், அது வெடிக்க வாய்ப்பு இருப்பதால் உடனடியாக வெளியேறுமாறு முதல்– மந்திரியிடம் கூறினர். முதலில் அரங்கில் உள்ள மக்களை வெளியேற்றுங்கள். அதன்பிறகு நான் இங்கு இருந்து செல்கிறேன் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அந்த அதிகாரிகளிடம் கூறினார்.

அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பிறகே முதல்– மந்திரி அங்கு இருந்து வெளியேறினார். ஒருமுறை அதிகாலை 3 மணிக்கு ஒரு பிரச்சினை தொடர்பாக முதல்– மந்திரிக்கு குறுந்தகவல் அனுப்பினேன். 3.05 மணிக்கு அவரிடம் இருந்து பதில் வந்தது. இவ்வாறு முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார்.

7 தீவுகள் இணைந்து உருவானது தான் மும்பை நகரம். எனவே மே 1–ந்தேதி மகாராஷ்டிரா தினம் கொண்டாடப்படுவது போல மும்பை தினமும் கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நினைவு பரிசு

விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் பசுபதி, மனோபாலா, இயக்குனர் பிரபு சாலமோன், நடிகை சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோருக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நினைவு பரிசு வழங்கினார்.

இதை தொடர்ந்து நடந்த நடன, காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் இன்னிசை கச்சேரியை விழாவில் கலந்துகொண்ட திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story