தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்பு கலெக்டர் பங்கேற்பு


தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்பு கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் நேற்று தேசிய தொழுநோய் விழிப்புணர்வு இயக்கம் மூலம் ‘தொழு நோய் இல்லா இந்தியா’வை உருவாக்குவது குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காச நோய் தடுப்புப் பிரிவு துணை இயக்குனர் அசோக், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி, கல்லூரி முதல்வர் சின்னைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் அனைவரும் தொழுநோய் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில், “தொழு நோய் என்பது தொற்று நோய் அல்ல. ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை எடுத்து கொண்டால் தொழுநோயை குணப்படுத்தி கொள்ளலாம். தொழுநோயாளிகளை யாரும் ஒதுக்கக் கூடாது. அவர்களிடம் சகஜமாக பேச வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். சேவை மனபான்மையுடன் நீங்கள் செயல்பட வேண்டும்” என்றார்.

சுகாதார வளாகம்

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கிரிவல பாதையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் சத்தர்மா அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள சுகாதார வளாகத்தை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஜானகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை சார்பில் தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்திய தொழு நோய் சேவை அறக்கட்டளை மேலாளர் மதன்ராஜா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் நிறுவனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகிலிருந்து இந்த ஊர்வலத்தை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர். 

Next Story