பள்ளிக்கு செல்லாமல் விஞ்ஞானி ஆன எடிசன்


பள்ளிக்கு செல்லாமல் விஞ்ஞானி ஆன எடிசன்
x
தினத்தந்தி 31 Jan 2018 10:34 AM IST (Updated: 31 Jan 2018 10:34 AM IST)
t-max-icont-min-icon

தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் எனும் ஊரில் பிறந்தார். எடிசன் ஏழாவதாக பிறந்த கடைசிப் புதல்வன்.

தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர். தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது. மேலும் பிறக்கும்பொழுதே தலை பின்புறமாக சற்று நீட்டிய நிலையில் பிறந்தார். அவர் வளர்ந்த பிறகும் அதன் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போனது. அவர் பள்ளிக்கு செல்லும் வயது வந்ததும் தாயார் பள்ளியில் சேர்த்தார்.

பள்ளிக்குச் சென்ற ஓரிரு நாட்களில் தனது தாயாரிடம் நான் பள்ளிக்கு இனி செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தார். காரணம் கேட்டபோது, பள்ளியில் எல்லோரும் என்னை “கோண மண்டையா” என்று சொல்லி கேலி செய்வதாக கூறினார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அவரது தாயார் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இரண்டு மாதங்கள் சரியாக பள்ளி சென்றவர் மீண்டும் ஒரு நாள் கண்களில் கண்ணீர் வழிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன்’ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார்.

மீண்டும் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்ட எடிசன் மீண்டும் ஒரு மாத காலம் மட்டுமே பள்ளிக்கு சரியாக சென்றிருப்பார். வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல மறுப்பு தெரிவிக்கத் தொடங்கிய எடிசனின் செயலைக் கண்டு கோபம் கொண்ட அவரின் தாயார் உனக்கு “கோண மண்டை” அதுதான் படிப்பும் ஏறவில்லை, சொல்வதையும் கேட்க மறுக்கிறாய் என்று அடிக்கத் தொடங்கினார். அன்றுடன் தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த அதே தாமஸ் ஆல்வா எடிசன்தான் பிற்காலத்தில் மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டார். அமெரிக்க அரசு அவருக்கு சுமார் 1097 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கியிருந்தது. உலகத்தில் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இன்றும் முதல் இடத்தில் திகழ்கிறார்.

தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த பின்பு அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மனிதர்களாகிய நமக்கு இருக்கும் அதே அளவுதான் மூளை இருக்கிறது. ஆனால் அவரின் பின்புறத் தலையின் நீண்டப் பகுதியில் தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந் திருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார்கள்.

Next Story