திருவண்ணாமலை ஈசானியகுளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் தரிசனம்


திருவண்ணாமலை ஈசானியகுளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:13 AM IST (Updated: 1 Feb 2018 6:13 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானியகுளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். இதில் தைப்பூசத்தன்று திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி நேற்று தீர்த்தவாரி நடந்தது.

இதை முன்னிட்டு காலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்த அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

கோவில் வரலாற்று கதை

அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின் படி, திருவண்ணாமலை பகுதியை வல்லாள மகாராஜா என்ற மன்னர் ஆண்டு வந்தார். அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தரான வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம், வல்லாள மகாராஜா தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டியுள்ளார்.

ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர், “உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன்” என்று கூறி உள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார்.

மேளதாளங்கள் இன்றி...

தைப்பூசத்தின்போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார். அப்போது போர்க்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனாக பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக நேற்று மாலை அறிவொளிப்பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் சென்றபோது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்கள் இன்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.


Next Story