செங்குன்றம் அருகே துணிக்கடையில் கொள்ளையடித்ததாக 4 பேர் கைது


செங்குன்றம் அருகே துணிக்கடையில் கொள்ளையடித்ததாக 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2018 6:45 AM IST (Updated: 1 Feb 2018 6:44 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே துணிக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள திருநீலகண்டன் நகரைச் சேர்ந்தவர் ஜாபர்உசேன். இவர், செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனி ஜி.என்.டி. சாலை அருகே துணிக்கடை வைத்து உள்ளார்.

கடந்த 26-ந் தேதி இரவு ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து கடை ஊழியர் தனபால்(வயது 62) என்பவரை வெட்டி விட்டு, கடையில் இருந்த ரூ.90 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் பட்டாக்கத்தியால் வெட்டியதில் தனபாலின் 2 கை விரல்கள் துண்டானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொள்ளையர்களை பிடிக்க புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் புழல் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் புழல் கேம்ப் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று சூரப்பட்டு அருகே அந்த ஆட்டோவை மடக்கி பிடித்தார்.

ஆட்டோவில் இருந்த 4 பேரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்த போது அவர்கள்தான் துணிக்கடையில் ஊழியரை வெட்டி விட்டு பணம் மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை வியாசர்பாடி முல்லை நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார்(20), வியாசர்பாடி புதிய மெகதீன்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற கெட்ட அஜித் (20), வியாசர்பாடி சத்தியமூர்த்தி தெருவைச்சேர்ந்த சுகுமார் (19), வியாசர்பாடி பி.வி.காலனி 8-வது தெருவை சேர்ந்த வெங்கட் என்ற வெங்கடேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகளையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். 

Next Story