கடலூரில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடலூரில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 1 Feb 2018 7:47 AM IST (Updated: 1 Feb 2018 7:47 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கடல் சீற்றம் காரணமாக, 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைபடகுகளில் தினசரி மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

அவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலைகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகளவில் மீன்கள் சிக்கவில்லை. தினசரி 100 டன் அளவுக்கு துறைமுகத்துக்கு மீன்களின் வரத்து இருக்கும். ஆனால் தற்போது வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்தது.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், சில தினங்களாக மீனவர்களின் வலைகளில் மீன்கள் சிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று(அதாவது நேற்று) பவுர்ணமி என்பதால் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தான் மீன்களும் குறைந்த அளவிலே சிக்கி வருகிறது. எனவே கடலூர் துறைமுகத்தில் இருந்து நேற்றுடன் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்றார்.

இதன் காரணமாக, மீனவர்களின் படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி தொழில் 3 நாளாக முடங்கி இருப்பதால், துறைமுக பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story