கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்கக்கோரி போராட்டம், 9 பேர் கைது


கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்கக்கோரி போராட்டம், 9 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2018 8:40 AM IST (Updated: 1 Feb 2018 8:40 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல விசைப்படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட விசைப்படகின் உரிமையாளர்கள் படகு மற்றும் பக்தர்களின் பெயர்களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல நாட்டுப்படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை பாரம்பரிய மீனவர் சங்கத்தை சேர்ந்த சின்னத்தம்பி, நாம் தமிழர் கட்சி டோமினிக் ரவி, வாழ்வுரிமை கட்சி ஜெரோன்குமார் உள்பட 9 பேர் ராமேசுவரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக வந்தனர்.

அப்போது அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story