செந்துறை அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம், போலீஸ் விசாரணை


செந்துறை அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம், போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 Feb 2018 9:15 AM IST (Updated: 1 Feb 2018 9:02 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்துறை,

நத்தம் தாலுகா செந்துறை அருகே குட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குட்டில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் எழும்புக் கூடாக கிடந்தது. இந்த பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் பிணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தெரிவித்தனர். அவர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜ் மற்றும் போலீசார் நெடுங்குட்டு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், பின்னர் பிணத்தை இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் கருப்பு நிறத்தில் பேண்டும், முழுக்கை சட்டையும் அணிந்து இருந்தார். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்தனர். வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story