பவானி அருகே பயங்கரம்; பெண்ணை வெட்டிக்கொன்று பிணம் எரிப்பு


பவானி அருகே பயங்கரம்; பெண்ணை வெட்டிக்கொன்று பிணம் எரிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2018 4:23 AM GMT (Updated: 1 Feb 2018 4:23 AM GMT)

பவானி அருகே பெண்ணை வெட்டிக்கொன்று பிணத்தை எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு கவிதா (25) என்ற மகளும், கவிசங்கர் (22) என்ற மகனும் உள்ளார்கள். இதில் கவிதாவுக்கு திருமணம் ஆகி அதே பகுதியிலும், கவிசங்கர் திருமணம் ஆகி சின்னியம்பாளையத்திலும் வசித்து வருகிறார்கள். தனலட்சுமியுடன் அவருடைய தாய் மற்றும் தந்தை இருளப்பன் (70) ஆகியோர் வசித்து வந்தார்கள். தனலட்சுமி அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அந்த தோட்டத்திலேயே ஒரு வீடும் உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தனலட்சுமி அந்த தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தனது மகன், மகளுடன் செல்போனில் பேசினார். அதன்பின்னர் அவர் தூங்க சென்றுவிட்டார். இந்த நிலையில் அவருடைய தந்தை இருளப்பன் தனது மகள் தனலட்சுமியை பார்ப்பதற்காக தோட்டத்து வீட்டுக்கு நேற்று காலை சென்றார். அப்போது வீட்டின் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்திருந்தது. அந்த இடம் மண்ணால் மூடப்பட்டு இருந்தது. வீடு முன்பு காலி மதுபாட்டில்களும் கிடந்தது.

வீடு திறந்து கிடந்ததால் இருளப்பன் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் தனலட்சுமியை காணவில்லை. இதனால் அவரை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் தனலட்சுமி கரிக்கட்டையான நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தகவல் அறிந்ததும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

வீட்டின் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்ததால் மர்மநபர்கள் நேற்றுமுன்தினம் இரவு தனலட்சுமியை வெட்டிக்கொன்று விட்டு பிணத்தை தூக்கிச்சென்று குப்பை மேட்டில் வைத்து எரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்த பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தததா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? அல்லது மர்மநபர்கள் குடிபோதையில் அவரை கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தனலட்சுமியின் உடலை தடயவியல் பரிசோதனைக்காக போலீசார் கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பவானி அருகே பெண்ணை வெட்டிக்கொன்று பிணம் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story