பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலைமறியல்


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Feb 2018 4:30 AM IST (Updated: 2 Feb 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

தமிழக அரசு கடந்த மாதம் 20-ந்தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அரசு, பஸ் கட்டணத்தை குறைத்தது. இந்த கட்டண குறைப்பு பயன்தராது என்றும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்தது. இதில் மாணவர்கள் வலுவாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். பஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அப்போது மாணவ-மாணவிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாணவ- மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story