நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு


நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2018 2:45 AM IST (Updated: 2 Feb 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் நெல்லையில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை,

ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் நெல்லையில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதிய நிர்வாகிகள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு உள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மாநில பொறுப்பாளர் சுதாகர், நெல்லை மாவட்டத்துக்கு புதிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் நியமித்தார்.இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நெல்லையில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிலைகளுக்கு மரியாதை

ரஜினி மக்கள் மன்ற நெல்லை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நெல்லை டவுன் மேற்கு ரதவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கினர். இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பில் உள்ள காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்து கோன், வ.உ.சி., பெரியார், ஒண்டிவீரன் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் குமரகுரு, தங்கதுரை, தளபதி முருகன், இளைஞர் அணி செயலாளர்கள் தாயப்பன், பகவதி ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திகேயன், மீனவர் அணி செயலாளர் ஆல்ரின், விவசாய அணி செயலாளர் ஆறுமுகம், வக்கீல் அணி ஜாகீர் உசேன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இதுகுறித்து மாவட்ட செயலாளர் செல்வகுமார் கூறுகையில், ரஜினி மக்கள் மன்றம் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பணி செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் பணிகளை தொடங்கி உள்ளோம்.இதையொட்டி வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே, இந்த கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.

Next Story