ரூ.50 கோடியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு


ரூ.50 கோடியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Feb 2018 4:15 AM IST (Updated: 2 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் ரூ.50 கோடியில் நடைபெற்று வரும் குடிநீர்திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.

ஆம்பூர்,


ஆம்பூர் நகராட்சி 2–வது தார்வழி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் திட்டப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆம்பூர் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2–வது தார்வழி பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.


இந்த பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும். இதன்மூலம் ஏற்கனவே வழங்கி வரப்பட்ட ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 90 லிட்டர் குடிநீர் வினியோகம் என்பது 135 லிட்டராக அதிகரிக்கும்.

மேலும் ஆம்பூர் நகரில் ரூ.165½ கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். இப்பணியை தொடங்கி விரைந்து முடிப்பதற்காகவும், திட்டப்பணிகளை கண்காணிக்கவும் தனிக்குழு ஏற்படுத்தப்படும்.


குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான குழாய்கள் பாதிக்கும் வகையில் சமூக விரோதிகள் பாலாற்றில் மணல் அள்ளினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீர் வினியோகம்தான் குடிநீர் வாரியத்தின் முக்கிய பணியாகும். அதனால் குடிநீர் வினியோகத்தை பாதிப்புக்குள்ளாகும் எந்த ஒரு செயலையும் செய்பவர்கள் மீது குடிநீர் வடிகால் வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தங்கஜெயா, மேற்பார்வை பொறியாளர் சேகர், நிர்வாக பொறியாளர் சுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் கல்பனா, நகராட்சி ஆணையாளர் எல்.குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story