ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் திட்டம்: பெங்களூரு மக்களின் கனவு நனவாகிறது


ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் திட்டம்: பெங்களூரு மக்களின் கனவு நனவாகிறது
x
தினத்தந்தி 2 Feb 2018 2:52 AM IST (Updated: 2 Feb 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரு மக்களின் புறநகர் ரெயில் திட்ட கனவு நனவாகிறது.

160 கிலோ மீட்டர் நீளத்திற்கு...


பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது பெங்களூருவாசிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்தது. இது தொடர்பாக மத்திய அரசின் ரெயில்வேதுறை மற்றும் மாநில அரசு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கு உதவுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. 160 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறநகர் ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் செலவில் 20 சதவீதத்தை மாநில அரசு ஏற்கிறது.

பெங்களூரு மக்களின் கனவு

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். அதில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 160 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக பாதை அமைக்கப்படும். பெங்களூரு நகர வளர்ச்சிக்கு இந்த திட்டம் உதவும்“ என்றார்.

ரெயில்வே அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், “பெங்களூருவில் தற்போதைக்கு 58 ரெயில்கள் மூலம் 116 முறை புறநகர் ரெயில் சேவைகள் வழங்கப்படும். ஒரு முறை 1,800 பேர் முதல் 2,000 பேர் வரை பயணிக்க முடியும்“ என்றனர். புறநகர் ரெயில் திட்டம் வேண்டும் என்ற பெங்களூரு மக்களின் கனவு இதன் மூலம் நிறைவேறும்.

போக்குவரத்து நெரிசல்

இந்த புறநகர் ரெயில் திட்டம் அமலுக்கு வந்த பிறகு மும்பை, சென்னையை போல் பெங்களூருவை சுற்றியுள்ள நகரங்களில் இருந்து அடிக்கடி ரெயில் போக்குவரத்து வசதி கிடைக்கும். இதன் மூலம் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெங்களூரு நகருக்குள் குடியிருக்க தேவை இல்லை. நகருக்கு வெளியே தங்கி வேலைக்கு வந்து செல்ல முடியும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் பெங்களூருவுக்கு அருகே உள்ள நகரங்களும் வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story