அரசு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை


அரசு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை
x

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் அரசு நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் நேற்று அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் வளர்ச்சி ஆணையர் அன்பரசு வரவேற்றுப் பேசினார்.

புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்து கவர்னர் கிரண்பெடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

புதுச்சேரி இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிறந்த இடம். இங்கு ஆன்மிகம் ஊன்றிபோய் உள்ளது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் மக்கள் வாழ்கின்றனர். விவசாயத்திற்கான நிலங்களை கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர். எனவே அவர்கள் பிறருக்கு உதவுபவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக பெண்கள் கடினமாக உழைக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் தூய்மையான இடத்திலும், ஆசீர்வதிக்கப்பட்ட இடத்திலும் இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அதிகாரம் என்பது யாரையும் தண்டிப்பதோ, கைது செய்வதோ, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதோ அல்ல. பணி செய்வது, சரிப்படுத்துவது, சேவை செய்வதே அதிகாரமாகும். நமக்கு போதும் என்ற நினைப்பு இல்லாவிட்டால் எவ்வளவு கொடுத்தாலும் போதாது. அவ்வாறு இருக்க கூடாது. அடிப்படை தேவை பூர்த்தியானால் போதும் என்று நினைக்க வேண்டும்.

மக்களுக்கு சேவையாற்றுவதை அதிகாரிகள் ஆசீர்வாதமாக கருதினால் சட்டங்களையும், விதிகளையும் சரியாக பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பர். இந்த புத்தாக்க பயிற்சியை அனைத்து துறைகளும் மாதம் ஒரு முறை துறைகள் தோறும் நடத்த வேண்டும். இதற்காக அதிகாரிகள் பஸ்களில் கிராமப்பகுதிகளுக்கு செல்லலாம்.

ஒருவருக்கு தெரிந்து இருப்பது, மற்றொருவருக்கு தெரிந்து இருக்காது. எனவே கூட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஒன்றாக இணைந்து விளையாடினால் மனச்சோர்வு நீங்கும். குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அதிகாரிகள் பஸ்களில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். புத்தகங்களை படித்தும், இணையதள வழியாகவும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் தொடர்ந்து 2ஆண்டுகள் செய்தாலே யூனியன் பிரதேசங்களிலேயே புதுச்சேரி சிறந்ததாக மாறும்.

என்னிடம் கோப்பு வரும் போது அதற்கான நிதி ஆதாரம் உள்ளதா? என்பதை அறிந்த பின்னரே ஒப்புதல் அளிப்பேன். அதிகாரிகள் அரசின் நிதிகளை செலவிடும் போது தங்கள் பணத்தை செலவு செய்வதாக நினைத்து செலவு செய்ய வேண்டும். பணம் கேட்டு ஏதேனும் கோப்பு வந்தால் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்க வேண்டும்.

அரசியல்வாதிகள் வற்புறுத்தினாலும் கேள்வி கேட்பது எனது கடமை என்று பதில் கூற வேண்டும். நான் கவர்னராகவும், நாராயணசாமி முதல்-அமைச்சராகவும் இருப்பது கடவுளின் கட்டளையாக கூட இருக்கலாம்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டும், பட்ஜெட்டை பாதுகாப்பவர்களாகவும் அதிகாரிகள் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள், நிர்வாகிகள் வருவார்கள் போவார்கள், ஆனால் கோப்புகள் அப்படியேதான் இருக்கும். அதிகாரிகள் தவறு செய்து இருந்தால் அது கோப்பில் பதிவு செய்யப்பட்டு எப்போதும் இருக்கும். இது பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெரும் காலத்தில் கூட சிக்கல் ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை செயலர் கந்தவேலு மற்றும் அரசு செயலர்கள், சார்பு செயலாளர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story